அமைச்சர் விஜயபாஸ்கரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு...!
புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் தாக்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பெரும்பாலானவர்களுக்கு அரசு நிவாரண பொருட்கள் இன்னும் கிடைக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் தாக்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பெரும்பாலானவர்களுக்கு அரசு நிவாரண பொருட்கள் இன்னும் கிடைக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விராலிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட மாத்தூர் மற்றும் மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பள்ளிக்கு காரில் வந்தார். அப்போது குமாரமங்கலம் ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு கஜா புயல் நிவாரண பொருட்கள் இன்னும் வழங்கப்படவில்லை. எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அமைச்சர் காரை மறிக்க முயன்ற மக்களை தடுத்து நிறுத்தி சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார், உங்களது கோரிக்கையை அமைச்சர் திரும்பி வரும்போது எடுத்து சொல்லுங்கள், அவர் உங்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பார் என்று கூறியதன்பேரில், அமைதி அடைந்தனர். பின்னர், விழா முடிந்து திரும்பிய அமைச்சர் விஜயபாஸ்கரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, புயலால் எந்த பாதிப்புமே இல்லாத கான்கிரீட் வீடுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு கிடைக்கவில்லை என்று முறையிட்டனர். இதைக்கேட்ட அமைச்சர், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.