சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி..! அரசு வேலை வழங்கி உதவிய உதயநிதி
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றிருந்த பாப்பாத்தியின் வறுமை நிலையை அறிந்து அரசு வேலை வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பாரா விளையாட்டுப் போட்டிகளில் பார்வையற்றோருக்கான பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற பாப்பாத்தி என்பவர் தனது குடும்பம் வறுமை நிலையில் இருப்பதால் தனக்கு ஏதேனும் வேலை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இதை எடுத்து தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணி வழங்கி உதயநிதி ஸ்டாலின் அந்த பெண்மணியிடம் பணி நியமன ஆணையை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சார்ந்தவர் செல்வி பாப்பாத்தி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் முதுகலை தமிழ் பட்டாதாரி ஆவார். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பாரா விளையாட்டுப் போட்டிகளில் பார்வையற்றோருக்கான பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
பணி நியமன ஆணை வழங்கிய உதயநிதி
செல்வி பாப்பாத்தி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை, நேரில் சந்தித்து தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதாகவும், தான் முதுநிலைபட்ட மேற்படிப்பு படித்துள்ளதாகவும் தெரிவித்து தனது குடும்ப நிலையைக் கருத்திற் கொண்டு தனக்கு ஏதாவது வேலை வாய்ப்பு வழங்கிடுமாறு கோரிக்கை வைத்தார்.
செல்வி பாப்பாத்தி அவர்களின் கோரிக்கையை பரிவுடன் கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அன்னாருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணிநியமனம் வழங்கிட ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து, இன்று (10.05.2023) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செல்வி பாப்பாத்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான ஆணையினை வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்