சோழபுரம் கல்லூரி மாணவர்களின் பேருந்து வசதி கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவிய தவறான தகவலுக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கமளித்து, பேருந்துகள் முறையாக நின்று செல்வதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
முதல்வருக்கு மாணவர்கள் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், சோழபுரம், புனித ஜஸ்டின் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரிக்கு உரிய பேருந்துகள் நிலையம் இல்லாத காரணத்தால் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 22 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தந்தார்.
அப்போது சிவகங்கை- திருப்பத்துார் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் மகளிர் அறிவியல் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என கல்லூரி முதல்வர், முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதலமைச்சர் உடனடியாக அக்கல்லூரி முன்பாக பேருந்துகள் நின்று செல்ல உத்திரவிட்டார்கள்.
உடனடியாக நிறைவேற்றிய முதலமைச்சர்
இந்த நிலையில் முதலமைச்சர் உத்தரவிட்டும் பேருந்துகள் நிற்கவில்லையென சமூகவலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்டுள்ள தகவலில், சிவகங்கை திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக அனைத்துப் பேருந்துகளும் 22.01.2025 முதல் நின்று செல்கின்றன என தெரிவித்துள்ளார்.
இது குறித்து 28.01.2025 அன்று சில சமூக வலைதளங்களில் முதலமைச்சர் உத்திரவு பின்பற்றப்படவில்லை என தவறான தகவல் வெளியானது தெரிந்தவுடன், உடனடியாக காரைக்குடி துணை மேலாளர் (வணிகம்) அவர்கள் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று ஆய்வு செய்து, கல்லூரி முதல்வர் அவர்களிடம் சென்று பேருந்து நின்று செல்வதை உறுதி செய்தார்.

முற்றிலும் தவறானது- சிவசங்கர் தகவல்
மேலும், துணை மேலாளர் அவர்களிடம் கல்லூரி முதல்வர், முதலமைச்சர் அவர்களுக்கும், தனக்கும் நன்றி தெரிவித்து பாராட்டுச்செய்தி கடிதம் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில் பேருந்துகள் நின்று செல்கின்றன என்றும், சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செய்வதை கண்காணித்திட தீனதயாளன் என்ற பரிசோதகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த அலுவலர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டதில் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இக்கல்லூரி முன்பாக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே. சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது. உண்மைக்குப் புறம்பானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
