அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி மாதம் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டித்துக் கொண்டே வருகிறது.
2024 மக்களவை தேர்தல்: யாருக்கு வெற்றி? ஆட்சியமைப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!
அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி மாதம் 4ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது என்று மறுப்பி தெரிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.