ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அரசை கலாய்த்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசை தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கிண்டல் அடித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி மத்திய அரசு அமைத்தது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவானது, 18,626 பக்கங்களை கொண்ட விரிவான அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அண்மையில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என அந்த குழு பரிந்துரைத்துள்ளது. “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குழு ஒருமனதாகக் கருதுகிறது.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என அக்குழு பரிந்துரைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நிறைவேற்ற முனைப்பு காட்டி வரும் திட்டங்களில் முக்கியமானதான ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நீங்க மட்டும் தான் பல மொழி பேசுவீங்களா? எனக்கும் தெரியும்பா... இந்தியில் வாக்கு சேகரித்த அண்ணாமலை
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசை தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கிண்டல் அடித்துள்ளார். மதுரையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பழனிவேல் தியாகராஜன், “543 தொகுதிக்கே 3 மாசம் தேர்தல் நடத்துனா. அப்ப மொத்த நாட்டுக்கும் ஒன்னா தேர்தல் நடத்த உங்களுக்கு 2 வருஷம் ஆகிடும்” என ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அவர் விமர்சனம் செய்தார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.