Asianet News TamilAsianet News Tamil

ஆளுநரால் தாமதமாகும் பட்டமளிப்பு விழாக்கள்: அமைச்சர் பொன்முடி சொன்ன காரணம்!

ஆளுநரால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

Minister ponmudi told the reason why Universities graduation ceremonies delayed by Governor
Author
First Published Jun 8, 2023, 1:55 PM IST

தமிழ்நாட்டில் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு அவர்கள் படித்த படிப்புகளுக்கான பட்டங்கள் வழங்கப்படும். ஆனால், அண்மைக்காலமாக தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. தமிழ்நாட்டில் இதுவரை 7 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு நடத்தப்படவில்லை. இதனால், பல லட்சம் மாணவர்கள் பட்டபடிப்பிற்கான சான்றிதழ் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநர் தேதி கொடுக்காத காரணத்தால் பட்டமளிப்பு விழாவை நடத்த முடியவில்லை என பல்கலைக்கழகங்கள் தெரிவித்திருந்தன. இந்தநிலையில் 4 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவிற்கான தேதியை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் 16ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாகவும், திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் வருகிற 19ஆம் தேதியும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூன் 28ஆம் தேதியும்,  ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 7ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இன்னும் நியமிக்கப்படவில்லை. துணை வேந்தரை தேர்வு செய்ய தேர்வு குழு தமிழக அரசால் அமைக்கப்படவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படாததால் பட்டமளிப்பு விழா நடத்துமாறு கல்லூரி நிர்வாகம் கோரவில்லை எனவும் ஆளுநர் மாளிகை விளக்கமளித்திருந்தது.

பட்டம் பெற முடியாமல் தவித்த மாணவர்கள்.! 4 பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழாவிற்கு தேதி அறிவித்த ஆளுநர்

இந்த நிலையில், ஆளுநரால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என ஆளுநர் விரும்புகிறார். இதன் காரணமாகவே தாமதம் ஏற்படுகிறது என தெரிவித்துள்ள அமைச்சர் பொன்முடி, கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் காத்திருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

“கோவை பாரதியார் பல்கலை. துணை வேந்தர் தேர்வு செய்ய கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரிலேயே மூவர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், ஒப்புதல் அளிக்காமலேயே ஆளுநர் இருக்கிறார். யு.ஜி.சி. சார்பில் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திக்கிறார். அப்படி ஒரு விதியே இல்லை; சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட விரும்புகிறாரா?” எனவும் அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios