Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி? விரைவில் அறிவிப்பு!

குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Minister ponmudi to become MLA announcement likely to be soon
Author
First Published Mar 13, 2024, 4:32 PM IST

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில், 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1,72,63,468 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதரம் இல்லை எனக் கூறி இருவரையும் 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனால், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் பொன்முடி உடனடியாக இழந்தார். மேலும், பொன்முடி எம்.எல்.ஏ.வாக இருந்த திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அத்துடன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)இன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அதுபோல, சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

பொய்களின் குடோன் திமுக: நடிகை குஷ்பு காட்டம்!

அந்த வகையில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால், தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவியை உடனடியாக பொன்முடி இழந்தார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியும் என்ற நிலையில், பொன்முடியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராகவோ, அமைச்சராகவோ தொடர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விவகாரத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை பின்பற்றப்படும் என்றார். அதேசமயம், பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படவில்லை. அவரது தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அவரால் மீண்டும் எம்.எல்.ஏ.வாக முடியாது என சிலர் கூறி வந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது. அதில், பொன்முடி குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர் மீண்டும் எம்.எல்.ஏ.வாக முடியும் என தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் அவர் மீண்டும் எம்.எல்.ஏ.வாக உள்ளதாக தெரிகிறது. பொன்முடி எம்.எல்.ஏ.வாக இருந்த திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios