minister jayakumar meeting with abirami ramanthan
தமிழ்நாடு திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 % கேளிக்கை வரியை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய முடிவை அறிவிப்பார் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை கடந்த 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியது.
இந்நிலையில் ஜிஎஸ்டி வரி 28 % கேளிக்கை வரி 30 % என இரட்டை வரி விதிப்பு முறையை கைவிடக் கோரி இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள 1000 திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

இதனால் சினிமா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது., பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.
இந்நிலையில் தங்கள் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் ஒரு குழுவினர் நிதி அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்துப் பேசினர்.
இதைனத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், நாங்கள் எங்கள் கோரிக்கைகளை நிதி அமைச்சரிடம் தெரிவித்தோம், அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து விவாதித்து விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார் கூறினார்.

இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்பிரச்சனை குறித்து ஒரு நல்ல முடிவை எடுத்து அறிவிப்பார் எனவும் அவர் கூறினார்.
தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் டிடிஎச்-ல் திரைப்படங்கள் ஒளிபரப்பப் போவதாக வெளியான தகவல் தவறானது என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
