கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பஸ்சின் பின்புறம், கார் மோதிய விபத்தில், அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர், அவரது 2 மகன்கள் சம்பவ இடத்திலேயே பலியான துயர சம்பவத்தை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார்.  

அதில், 

கடலூர்  மாவட்டம் வேப்பூர் ஐவதகுடி கிராமம் அருகே இன்று காலை (7.11.2018) திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த கார், கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியதில் காரில் பயணம் செய்த மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் அவர்களின் கூடுதல் சிறப்பு நேர்முக உதவியாளர் திரு.லோகந்தான் மற்றும் அவரது மகன்கள் திரு. நிர்மல்குமார் மற்றும் சிவராமன் ஆகிய 3  நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். 

இந்த விபத்தில் உயிர் இழந்த 3 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த செய்தி குறித்து அறிந்த உடன், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்கவும் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுளேன்.

விபத்தில் காயம் அடைந்தவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்து கொள்கிறேன் என முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் இரங்கல் தெரிவித்து  உள்ளார்.