காஞ்சிபுரத்தில் வறட்சியால பாதித்த விவசாய நிலங்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 12-ஆம் தேதி வீசிய வர்தா புயல் காரணமாக நெல் பயிர்கள் சேதமடைந்தன. இதுதவிர, பருவ மழை பொய்த்தது, காவிரி நதி நீர் போதிய அளவு திறக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புயல் பாதிப்புகள் குறித்து மத்திய அரசு குழுவினர் ஆய்வு செய்து சேத மதிப்புகளை கணக்கிட்டுச் சென்றனர். இந்த நிலையில், பயிர் பாதிப்புகளை தமிழக அரசின் உத்தரவின்பேரில், அமைச்சர்கள் - உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், சிறுவள்ளூர் கிராமத்தில் வறட்சியால் பாதிப்படைந்த விவசாய நிலங்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

“காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 141 கிராமங்களில் 4,225 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீதம் நெற் பயிராகும்.

இதுதொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, வரும் 9-ஆம் தேதி அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும்” என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழக தொழிலாளர் நல துறை செயலாளர் அமுதா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி, மாவட்ட வருவாய் துறை அதிகாரி சவுரிராஜன், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அருண் தம்புராஜ், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.ராமசந்திரன்,மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.