அமைச்சர் துரைமுருகன் திருமண நாளில் பூசாரி அர்ச்சனை: 2k கிட்ஸ் கலாய்; அன்றே அண்ணா சொன்ன விளக்கம்!
அமைச்சர் துரைமுருகன் திருமண நாளில் பூசாரி அர்ச்சனை செய்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது 51ஆம் ஆண்டு திருமண நாளை அண்மையில் கொண்டாடினார். முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் திருமண நாளில் பூசாரி அர்ச்சனை செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கருத்து தெரிவிக்கும் பலரும், வெளியேதான் பெரியார் கொள்கை; வீட்டிற்கு உள்ளே தெய்வ வழிபாடு என விமர்சித்து வருகின்றனர்.
திமுகவினர் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டால் பொதுவெளியில் விமர்சனங்கள் வருவது இது முதல்முறை இதற்கு முன்னரும் பல முறை இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், “இன்று வீடியோ போட்டு கலாய்க்கும் பலரும் 2k கிட்ஸ் அல்லது அரசியல் வரலாறு தெரியாமல் இருப்பவர்கள்தான். தமிழகத்தில் தி.க.விலிருந்து பிரிந்தவர்கள் அண்ணா தலைமையில் 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திமுக என்கிற கட்சியை உருவாக்கியபோது, கடவுள் மறுப்பு கொள்கைக் கொண்ட இயக்கமாக இல்லாமல், திமுக அனைவரையும் ஏற்கும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கொள்கை கொண்ட இயக்கம் என அண்ணா அறிவித்தார்.
ஆனால், திமுகவில் கடவுள் மறுப்பாளர்கள் பலர் இருந்தனர். கலைஞர் கருணாநிதி தான் காலமாகும் வரை கடவுள் மறுப்பில் இருந்தார். எம்ஜிஆர் முதலில் கடவுள் மறுப்பு பேசி பின்னர் தீவிர மூகாம்பிகை பக்தராக மாறிப்போனார். திமுகவிலும் 1980களுக்கு மேல் தீவிர கடவுள் மறுப்பாளர் தலைவர்கள் குறைந்து மத நம்பிக்கையுள்ள பல தலைவர்கள் முன்னணி பொறுப்புக்கு வந்தனர். மற்றவர்களின் நம்பிக்கையில் திமுக தலைமை ஒருபோதும் தலையிடாது.” என விளக்கம் அளித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம்: அண்ணாமலை எச்சரிக்கை!
திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கடவுள் மறுப்பாளர்கள். ஆனால், துர்கா ஸ்டாலின் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டனர். தவறாமல் பூஜைகள் செய்து வழிபடும் அவர், பல்வேறு கோயில்களுக்கும் அடிக்கடி செல்வார். இது பல்வேறு சமயங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மற்றவர்களது நம்பிக்கையில் தலையிடுவது அல்ல என்று திமுகவின் கொள்கைகள் குறித்து பல முறை முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதேபோல், திமுகவிலும் கடவுள் நம்பிக்கை கொண்ட பலர் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது மத நம்பிக்கை குறித்து பொதுவெளியில் வெளிக்காட்டிக்கொண்டதில்லை. சமீபத்தில் அவரது மத நம்பிக்கை குறித்தும், திமுகவை இந்து விரோத கட்சி என்றும் விமர்சித்தபோது, அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கொள்கைதான் திமுகவின் கொள்கை என்று தெரிவித்த ஸ்டாலின், தனது வீட்டில் தனது மனைவி தீவிர தெய்வபக்தி கொண்டவர் என்று விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.