Asianet News TamilAsianet News Tamil

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம்: அண்ணாமலை எச்சரிக்கை!

கிளாம்பாக்கத்தில் பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், பெருமளவில் போராட்டம் வெடிக்கும் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்

BJP state president annamalai warns tn govt on kilambakkam bus stand issue smp
Author
First Published Feb 10, 2024, 1:10 PM IST

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்துகளை சிறைப்பிடித்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், பெருமளவில் போராட்டம் வெடிக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றிய திமுக அரசு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.

நேற்றைய தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பயணிகள், ஊருக்குச் செல்லப் பேருந்துகள் இல்லாமலும், இருந்த ஒன்றிரண்டு பேருந்துகளும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் பயணிக்க முடியாமலும் நள்ளிரவில் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளைச் சிறைபிடித்தும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் நீக்கம்!

பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, வார இறுதியில் கூட போதுமான பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் இருந்திருப்பது வெட்கக் கேடு. நள்ளிரவில் பயணிகளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளியிருக்கும் திமுக அரசு முழுவதுமாகச் செயலற்றுப் போயிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. 

 

 

திமுக அரசு, உடனடியாக இந்த திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து, பூசி மொழுகும் வேலையில், பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், நேற்றைய பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் வெடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.” என அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கிளாம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள போக்குவரத்து துறை, “வழக்கமாக திருச்சிக்கு 105 பேருந்துகள் இயக்கப்படும் , விடுமுறை காரணமாக கூடுதலாக 60 பேருந்துகள் இந்த மார்க்கத்தில் நேற்று இயக்கப்பட்டது. மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக பேருந்துகள் கிளாம்பாக்கம் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பேருந்துகள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் பேருந்துகள் இயக்கம் சரி செய்யப்பட்டு தற்போது போக்குவரத்து சீராகியுள்ளது.” என தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios