மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ரூ.21 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் தொடங்க உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதிக்குப் பின்புற அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மறைந்த ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் எழுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் துரைசாமி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், மறைந்த ஜெயலலிதாவின் உடல், சட்டவிரோதமாக மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டள்து. எனவே உடலை வேறு இடத்தில், அடக்கம் செய்ய வேண்டும் என கோரியிருந்தார். மேலும், மெரினாவில் புதிய கட்டமைப்புகள் கட்ட அனுமதிக்கக் கூடாது எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்யநாராயணா மற்றும் சேஷசாயி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இந்த நிலையில், எம்.ஜி.ஆர். சமாதிக்கு சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு அருகே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரங்கள் அமையவுள்ளதாக கூறினார்.

நினைவிடத்துக்கு ஏராளமானோர் வருவதல் 21 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான திடடத்தை தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.