AMUL : இனியும் ஆவினையும், தமிழ்நாடு அரசையும் நம்பி பலனில்லை "அமுல் வந்தால் வரவேற்போம்."- பால் முகவர்கள் அதிரடி
பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு நியாயமான கொள்முதல் விலையும், அதற்கான தொகையை நிலுவையின்றியும் வழங்கிட முன் வர அமுல், நந்தினி உள்ளிட்ட எந்த ஒரு கூட்டுறவு பால் நிறுவனங்கள் தயாராக இருந்தாலும் அவற்றுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க தயாராக இருப்பதாக பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமுலுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
அமுல் நிறுவனத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருப்பதாக பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கெல்லாம் முன்னோடி நிறுவனமாக திகழ்ந்து இந்தியாவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து செயல்பட்டு வரும் அமுல் நிறுவனம் அதன் பால் மற்றும் பால் பொருட்களை தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சந்தைப்படுத்த ஏதுவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பால் பண்ணை அமைத்து வருவதாக ஒருசில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறானதாகும்.
பால் பண்ணையை தொடங்கும் அமுல்
அமுல் நிறுவனத்தைப் பொறுத்தவரை பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் உபபொருட்களை அண்டை மாநிலங்களில் உற்பத்தி செய்து ஏற்கனவே தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சந்தைப்படுத்தி வரும் சூழலில் அவற்றோடு தற்போது கூடுதலாக 140கிராம் மற்றும் 450கிராம் அளவுள்ள தயிர் பாக்கெட்டுகளை ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், பலமனேரி எனுமிடத்தில் உள்ள பால் பண்ணையில் இருந்து உற்பத்தி செய்து ஆந்திரா, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் சந்தைப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது போல் தமிழ்நாட்டில் பால் பண்ணை அமைத்து, பால் வணிகத்தில் ஈடுபடும் எண்ணம் அமுல் நிறுவனத்திற்கு இருக்குமானால் அதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்க தயாராக இருக்கிறது.
ஏனெனில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தமிழ்நாட்டில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களை காக்கும் கவசமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் கடந்த காலங்களில் அமுல், நந்தினி உட்பட மற்ற மாநிலங்களின் கூட்டுறவு பால் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் வந்து பால் கொள்முதல் மற்றும் பால் விற்பனை சந்தைக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடுமையாக எதிர்த்து ஆவின் நிறுவனத்திற்கு அரணாக நின்று செயல்பட்டு வந்தது. அதனடிப்படையிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமுல் நிறுவனத்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கடிதம் எழுதியதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.
மாற்றாந்தாய் மனப்பான்மை
ஆனால் ஆவின் மற்றும் பால்வளத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளாகட்டும் அல்லது பால்வளத்துறை அமைச்சர்களாக வருபவர்களாக இருக்கட்டும் ஆவினை சுரண்டுவதிலேயே குறியாக இருந்து வருவதோடு, அதனை தடுக்கத் தவறி, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பை வீணடிக்கும் செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் துணை போய் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் வாழ்வாதாரம் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் வெற்று விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் இனியும் ஆவினையும், தமிழ்நாடு அரசையும் நம்பி பலனில்லை என்கிற முடிவிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வந்திருக்கிறது.
கொள்முதல் விலையை நிலுவையின்றி வழங்கிடுக
எனவே தமிழ்நாடு முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களுக்கு தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையான வருமானத்தையும், பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களின் தங்குதடையற்ற விநியோகத்தையும் அளிப்பதோடு, பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு நியாயமான கொள்முதல் விலையும், அதற்கான தொகையை நிலுவையின்றியும் வழங்கிட முன் வர அமுல், நந்தினி உள்ளிட்ட எந்த ஒரு கூட்டுறவு பால் நிறுவனங்கள் தயாராக இருந்தாலும் அவற்றுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தயாராக இருக்கிறோம் என பால்முகவர்கள் தெரிவித்துள்ளனர்.