14 ஆண்டுகளாக விற்பனையில் ஆவின் டிலைட்..! மீண்டும் விளம்பரம் ஏன்.? யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு- பால்முகவர்கள்
14 ஆண்டுகளாக விற்பனையில் இருந்த ஆவின் டிலைட் பாலை தற்போது தான் அறிமுகப்படுத்துவது போல் விளம்பரம் செய்வது ஏன் என பால்முகவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஆவின் பால்
தமிழகம் முழுவதும் தினசரி 40 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இந்தப் பால் சமன்படுத்தப்பட்ட பால் நிலைப்படுத்தப்பட்ட பால், நிறை கொழுப்பு பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் என தினசரி 30 லட்சம் லிட்டர் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 3 மாதங்களுக்கு கெட்டு போகாத அளவுக்கு ஆவின் டிலைட் என்ற புதிய பால் வகைகளை ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாலானது எந்தவித குளர்சாதன வசதி இல்லாமல் 90 நாட்களுக்கு சேமித்து பயன்படுத்தலாம். கெட்டுப் போகாது என கூறப்படுகிறது.
90 நாட்கள் கெட்டுபோகாத பால்
இந்த ஆவின் டிலைட் பாலில் 3.5 சதவீத அளவுக்கு கொழுப்பு இருக்கும். 0% பாக்டீரியா. நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கு இது ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது. 500 மில்லி லிட்டர் அளவுள்ள இந்தப் பால் பாக்கெட் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கனவே விற்பனையில் இருந்த சிறிய வகை பால் பாக்கெட் மற்றும் சில பால் பொருட்களை புதிதாக அறிமுகம் செய்வதாக கடந்த காலங்களில் கூறியது போல் தற்போது அதே வரிசையில் ஆவின் டிலைட் பசும்பாலினை சேர்த்திருக்கிறது ஆவின் நிர்வாகம் என தெரிவித்துள்ளார்.
யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு
மேலும் சுமார் 14ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் ஆவின் டிலைட் பசும்பால் (Fat 3.5% SNF 8.5%, 0%Bacteria, 90நாட்கள் காலாவதி தேதி, விற்பனை விலை 30.00ரூபாய்) பாக்கெட்டை தற்போது தான் புதிதாக அறிமுகம் செய்வதாக கூறி பால்வளத்துறை அமைச்சர், பால்வளத்துறை செயலாளர், ஆவின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோர் கூட்டாக விளம்பரப்படுத்துவது தமிழக முதல்வர் அவர்களை ஏமாற்றவா..? அல்லது பொதுமக்களை ஏமாற்றவா..? என தெரியவில்லை.முதல்வர் அவர்களே விழித்துக் கொள்ளுங்கள்..! என அந்த அறிக்கையில் பொன்னுசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்