அரியலூரில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதால் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அரசு தலைமை கொறடா தாமரை. எஸ்.ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அரியலூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு அரசு தலைமை கொறடா தாமரை. எஸ்.ராஜேந்திரன் பேசியது:

“அரியலூர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில், புதன்கிழமை (நாளை) நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவையொட்டி, அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே பல்வேறு கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, ஊராட்சிப் பகுதிகளில் எம்.ஜி.ஆர். குறித்த குறும்படமும், அவர் நடித்த திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலை வகிக்கிறார்.  மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசுகிறார்.

விழாவில் அமைச்சர்கள், எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்கின்றனர். அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்க, மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா நன்றி கூறுகிறார்.

இந்த விழாவையொட்டி பிற்பகல் 4 மணிக்கு இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

இவ்விழாவில் மக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன், செயங்கொண்டம் எம்.எல்.ஏ.ராமஜெயலிங்கம், அரசு வழக்குரைஞர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.