கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்ட உள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கனமழை பெய்துவருகிறது. அதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளன. எனவே கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,000 கன அடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 83,000 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது. 

அதனால் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1,18,000 கன அடிக்கு மேலாக நீர் வந்துகொண்டிருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டியுள்ளது. விரைவில் 100 அடியை எட்ட உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 57.3 டிஎம்சி ஆக உள்ளது. 

இதற்கிடையே மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பது குறித்து நேற்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, வரும் 19ம் தேதி(நாளை மறுநாள்) நீர் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார். 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.