தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று பயங்கர சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும்  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்னும் 6 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பே தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே மிக அதிக அளவிலான வெப்பம் நிலவுகிறது. இந்த அதிக வெப்பத்தின் காரணமாக காற்றின் ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்பட வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில்  இன்று பயங்கர சூறைக்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.