விடாமல் துரத்தப்போகுது மழை.! யூடர்ன் போடும் காற்றழுத்து தாழ்வு பகுதி-வெளியான அப்டேட்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது, இது கடந்த 24 மணி நேரமாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனையடுத்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மக்களை அச்சுறுத்தும் அளவிற்கு மழை பெய்யவில்லை. இதனால் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். இதனிடையே வங்க கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா பக்கம் செல்லவுள்ளது. இதனால் விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஆந்திரா பக்கம் செல்லும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் மேலே சென்று மேற்கு வங்கம், ஒடிசா வரை செல்லும் என வானிலையாளர்கள் கணித்துள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்து யூடர்ன் எடுத்து மீண்டும் தமிழக கடற்கரை பகுதிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.
மழைக்கு தற்காலிக ஓய்வு
அந்த வகையில் வருகிற 22 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மழை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இருந்த போதும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இன்றைய தினத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவடங்களில் லேசான மழைக்கு மட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். காலை 10மணிக்கு பிறகு சென்னையில் மழை குறையும் என கணித்துள்ளனர். எனவே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்றோடு தற்காலிகமாக மழை நின்றுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேகங்கள் சென்னை நகருக்குள் வராமல் கடலிலேயே அதிகளவு மழையை கொடுத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இன்றே கடைசி மழை
மழை நிலவரம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் (KTCC) காற்றழுத்த தாழ்வு பகுதியில இன்று இறுதி மழை பெய்யும். கடலுக்கு அருகாமையில் மழை தொடங்கும், மேகங்கள் ஆந்திர கடற்கரைக்கு செல்லும் என்பதால் பெரும்பாலும் இந்த காற்றழுத்தத்தில் இருந்து கடைசி மழையாகும். இது சாதாரண மழையாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்