வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறானது: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு
தென் மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு சரியாக இருந்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அதற்கு ஏற்ப சரியாக இருந்திருக்கும் என்று தலைமைச் செயலாளர் கூறியிருக்கிறார்.
தென் மாவட்டங்களில் பெருமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துக் கூறவில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு தவறாகிவிட்டது என்றும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா குறை கூறியுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் அளித்துள்ளார். மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது என்றார்.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உடனடியாக மின்சாரம் வழங்கினால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறிய தலைமை செயலாளர், 9 ஹெலிகாப்டர் மூலம் 13,500 கிலோ உணவு பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது எனவும் விமானப்படை, கடற்படை மூலமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், "பெருமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துச் சொல்லவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகியுள்ளது. கணிப்பு சரியாக இருந்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அதற்கு ஏற்ப சரியாக இருந்திருக்கும்" என்று கூறியிருக்கிறார்.
மழை வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ள தென் மாவட்டங்களில் 10 பேர் பலியாகியுள்ளனர் என்றும் இதில் நெல்லை மாவட்டத்தில் 6 பேரும் தூத்துக்குடியில் 3 பேரும் மழையால் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒருவர் இயற்கையாக மரணம் அடைந்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.