meteorological department warning fishermen

தெற்கு வங்கக்கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். 

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்:

டிசம்பர் 6 வரையிலான காலக்கட்டத்தில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும். தெற்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

மழை வாய்ப்பு:

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்.