தேனி, திண்டுக்கல், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டி வருகிறது. அதனால் குமரி, நெல்லை, கோவை மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வால்பாறையில் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

கனமழையால் ஏற்கனவே நெல்லை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் மிக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளை பொறுத்தமட்டில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்யும் எனவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.