தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. தமிழகத்தில் சென்னை தவிர  மற்ற இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி சேதப்படுத்தியது. ஆனால் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் போதிய மழை இல்லை. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இன்றுடன் முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார். 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையானது அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் நீடிக்கும். தமிழகத்தின் உள் பகுதி மாவட்டங்களில் மூடுபனியும் நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் உறைபனி நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவானதை சுட்டிக்காட்டிய புவியரசன், அவற்றில் கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது என்றும், மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்றுவிட்டதால் தமிழகத்தில் போதிய மழை பெய்யவில்லை என்றார்.