குறுக்கும், நெடுக்குமாக பேருந்துகள் பறக்காதா சாலைகள் மற்றவர்களுக்கு அமைதியான சாலைகள்தான். ஆனால் பேருந்துகளை நம்பியே வாழ்க்கையை நகர்த்தும் பயணிகளின் நிலையை எண்ணிப்பார்த்தால் அதன் அழுத்தம் புரியும்.
மே 15_ம் தேதியான இன்றிலிருந்து ஸ்டிரைக்கில் இறங்கப்போகிறோம் என்று அறிவித்துவிட்டு, யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நேற்று மாலையே பேருந்துகளை நிறுத்திவிட்டு போராட்டத்தை துவக்கியது அட்ராசிட்டியின் உச்சம்.

நாளைதானே ஸ்டிரைக், இரவுக்குள் வீடு திரும்பிவிடலாம் எனும் எண்ணத்தில் எங்கெங்கெல்லாமோ குடும்பம் குடும்பமாக போயிருந்த மக்கள், மாலையே பஸ் ஸ்டிரைக் துவங்கிவிட்டது என்றதும் துடித்துப் போனார்கள். 

ஏற்கனவே ‘கொள்ளையர் குல திலகங்களாக’ பயணிகளால் வர்ணிக்கப்படும் தனியார் பேருந்துகளை விட்டால் வேறு வழியில்லை எனும் நிலையில் அடித்துப் பிடித்து அதில் ஏற முயன்றனர். பல கிராமங்களுக்கு தனியார் பஸ் சர்வீஸ் இல்லையென்பதால் குழந்தைகளுடன் மக்கள் பட்ட இம்சையை எழுத்தில் விளக்கிட முடியாது.

இது விடுமுறை காலம், அதிலும் நேற்று ஞாயிற்றுக் கிழமை வேறு. கொடைக்கானல், கன்னியாகுமரி, ஊட்டி என்று சுற்றுலா தளங்களுக்கு போய்விட்டு திரும்ப முடியாமல் மக்கள் பட்ட கஷ்டம் மாக்களுக்கு கூட கண்ணீர் வரவழைக்கும் கதைதான்.