meeting with transport trade union will be conduct on tomorrow
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் போக்குவத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்தொழிலாளர்களுடன் 5 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் நேற்று முன் தினம் முதலே போக்குவரத்து தொழிலாளர்கள்போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து நேற்று மாலை 3.30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் யாசிம் பேகம் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த பேச்சுவார்த்தை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது.
துணை ஆணையரின் அழைப்பை அடுத்து அனைத்து தொழிற்சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். ஆனால் அரசு தரப்பில் யாரும் வராததால் பேச்சுவார்த்தையை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், மீண்டும் நாளை காலை முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு தரப்பில் அழைப்பு விடுத்துள்ளனர். அதனால் இதுகுறித்த பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.
