Asianet News TamilAsianet News Tamil

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து - ஆறு மாதத்திற்குள் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் - ஓபிஎஸ் உறுதி...

Meenakshi Amman temple fire accident - will be renovated within six months - ops
Meenakshi Amman temple fire accident - will be renovated within six months - ops
Author
First Published Feb 6, 2018, 7:32 AM IST


மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதி ஆறு மாத காலத்திற்குள் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் என்றும் முன்பு எப்படி இருந்ததோ அதே போன்று கொண்டுவரப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை வந்தார். அவரை ஆட்சியர் வீரராகவராவ், கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் வரவேற்று கோவிலுக்குள் உள்ளே அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீ விபத்து நடந்தது எப்படி? என்பது பற்றியும், தீ விபத்திற்கு பின்னர் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.  பின்னர் அவர் தீ விபத்து நடந்த வீரவசந்தராயர் மண்டபம் பகுதி முழுவதையும் பார்வையிட்டார்.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம், நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சாலைமுத்து, வில்லாபுரம் ராஜா, வெற்றிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் கோவிலுக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் கூறியது:

"தீ விபத்து பாதிப்பால் ஏற்பட்டுள்ள சேதம் முழுமையாக மதிப்பிடப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட 7000 சதுர அடி பகுதி ஆறு மாத காலத்திற்குள் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு, முன்பு எப்படி இருந்ததோ அதே போன்று கொண்டுவரப்படும்.

இனி மேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு "ஆலயப் பாதுகாப்புக் குழு"" அமைக்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு கோணங்களில் தீவிரமாக பரிசீலனை செய்து ஆய்வு செய்யப்படும். அவற்றின் மூலம் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் திருக்கோவில்கள் பாதுகாக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவிலுக்குள் கடைகள் இருப்பதா? வேண்டாமா? என்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

வருங்காலத்தில் தீ விபத்துகள் கோவில்களில் நடைபெறாத வண்ணம் எந்த வகையான பாதுகாப்புகளை உருவாக்க வேண்டும் என்பது பற்றியும், அடியார்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

பாரம்பரிய சின்னமாக விளங்கக் கூடிய திருக்கோவில்களில் கடைகள் மூலம்தான் விபத்து ஏற்படுகிறது என்றால், அந்த கடைகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்படும்.

கோவில்களை தனிப்பட்ட நபர்களிடமோ, தனிப்பட்ட துறையினரிடமோ கொடுப்பது சரியாக இருக்காது. அரசுக்குத்தான் அதன் முழு பாதுகாப்பையும் உறுதி செய்கின்ற பொறுப்பு முழுமையாக இருக்கும்.

உலகப்புகழ் பெற்ற கோவில்களில் தனியாக தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

இந்த தீ விபத்து நமக்கு சிறந்த படிப்பினை வழங்கியுள்ளது. அதனை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில்களில் இது போன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்து, ஆங்காங்கே இடையூறு இருந்தால் அதனை அகற்றி பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க வழிவகை செய்யப்படும்.

தீ விபத்திற்கான காரணம் பற்றிய புலன் விசாரணை முடிந்த பின் முதலில் உங்களுக்குத் தான் தெரிவிக்கப்படும். விபத்து குறித்து விசாரணை தொடங்குவது பற்றி முறையான அறிவிப்பு அரசின் மூலம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

கோவில் பாதுகாப்பில் குறைபாடு என்றால், அங்கு கடைகள் வாடகைக்கு விடப்பட்டது தான். எனவே, இனி உள்ளே கொண்டு செல்லும் பொருட்களும், வெளியே கொண்டு வரும் பொருட்களும் சோதனை செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios