திருவண்ணாமலை

தமிழக அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை சுகாதார மாவட்டத் தலைவர் சி.கந்தசாமி தலைமை தாங்கினார். 

செய்யாறு சுகாதார மாவட்டத் தலைவர் சுதா, செயலர் அ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை சுகாதார மாவட்டச் செயலர் மு.பிரேம்குமார் வரவேற்றார்.

இதில், சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.ஜி.பாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், "தமிழக அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். 

மாநில அரசின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.