Matikkala petition at all Action on the requestd stir ran

கரூரில் 12 நாளுக்கு ஒருமுறை, அரை மணிநேரம் குடிநீர் வழங்கும் நேரத்தை மாற்றித் தருமாறு மக்கள் மனு கொடுத்ததை கண்டுக்காத அதிகாரிகள், வெற்றுக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டவுடன் ஓடிவந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

கரூர் நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டில் சின்ன ஆண்டாங்கோவில் இரண்டாவது குறுக்குத் தெரு பெரியசாமி லே அவுட் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்தப் பகுதியில் நகராட்சி மூலம் காவிரிக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக 12 நாளுக்கு ஒருமுறை, அரை மணிநேரம் மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தி வந்தனர்.

குடிநீர் விநியோகம் செய்யப்படும் கால அளவை 2 மணிநேரம் நீட்டித்து விநியோகம் செய்யுமாறு நகராட்சி அலுவலகத்தில் அப்பகுதியினர் தெரிவித்தனர். ஆனால் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், கால அளவை நீட்டிக்காமல் வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இதனால், சினம் கொண்ட அப்பகுதியினர் நேற்று சின்னஆண்டாங்கோவில் சாலை பிரிவில் கரூர் - திருச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரூர் நகராட்சி குடிநீர் ஆய்வாளர் நல்லையா மற்றும் நகர காவல் நிலையத்தினர் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், அதிகாரிகள், “கால அளவை நீட்டித்து குடிநீர் விநியோகம் செய்யப்படும்” என உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் கரூர் - திருச்சி சாலையில் போக்குவரத்து முடங்கியது.