திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் தடையை தளர்த்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தமிழகத்திலும் விரைவில் முக கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

ஜனவரி மாதம் நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30,000 ஐ கடந்தது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கபட்டன.முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, நேர கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்தன. கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தளங்களுக்கு செல்வதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

பள்ளிகள், கல்விநிறுவனங்களில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு 50 க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனையடுத்து விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளில் இருந்தும் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் தடையை தளர்த்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உட்பட இதர தளர்வுகளை அறிவிக்க அபாய மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையினை கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருதில் கொண்டு கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு நடைமுறையில் இருக்கும் தடையை நீக்கவும், 3-3-2022 முதல் 31-3-2022 வரை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வந்த திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 500 நபர்களும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 நபர்களும் பங்கேற்கலாம் என்ற தடையை நீக்குவது குறித்தும் முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் முககவசம் அணிவதற்கான தடையும் முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில், இதுக்குறித்தும் முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்திலும் விரைவில் முக கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.