Marxist Party members arrested for protest against bus tariff hike

ஈரோடு

பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக அரசின் இந்த நடவடிக்கையும் எதிர்த்தும் ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 27 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

கட்டண உயர்வு

தமிழகத்தில் 19-ஆம் தேதி இரவு திடீரென அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு நேற்று முன்தினம் காலை முதல் அமலுக்கும் வந்தது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பு போன்றே இந்த கட்டண உயர்வுக்கும் மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டது தமிழக அரசு.

எதிர்ப்பு

இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சில இடங்களில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

சாலை மறியல்

இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், தமிழக அரசின் இந்த நடவடிக்கையும் எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஈரோடு - கோவை பிரிவு சாலையில் நேற்று காலை ஒன்று திரண்டனர்.

கைது

பின்னர், அவர்கள் சாலையில் கைகோர்த்து நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமைத் தாங்கினார். இதில் 7 பெண்கள் உள்பட 27 பேர் பங்கேற்றனர். அப்போது, அவர்கள் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் காவலாளர்கள் போராட்ட களத்திற்கு வந்து சாலை மறியல் ஈடுபட்ட 27 பேரையும் கைது செய்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் அவர்கள் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த திடீர் சாலை மறியலால் ஈரோடு - கோவை பிரிவு சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.