திருவொற்றியூர் காசி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக. மீனவர். கடந்த மாதம் எண்ணூர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது. அதில், ஒரு கப்பலில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் படர்ந்தது.

இதனை அகற்றும் பணியில், மீனவர்கள் பலர் ஈடுபட்டனர். அதில், அசோக் கலந்து கொண்டு எண்ணெய் படலத்தை அகற்றினார். அப்போது, அவருக்கு ஒரு சுமார் அரையடி உயரத்தில் சிவலிங்கம் கிடைத்தது.

உடனே அசோக், அதை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்றார். கடந்த 2 நாட்களுக்கு முன், தனக்கு கிடைத்த சிவ லிங்கத்தை பற்றி, அவரது நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு, சிவ லிங்கத்தை வீட்டில் வைக்க கூடாது. அதனால்,கேடு ஏற்படும். கிடைத்த இடத்திலேயே போட்டுவிடு என நண்பர் அறிவுரை கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அசோக், நேற்று முன்தினம் எண்ணூர் பாரதி நகர் கடல் பகுதியில், கிடைத்த இடத்திலேயே லிங்கத்தை வீசினார்.

அப்போது, அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவர், இதை பார்த்தார். அசோக் அங்கிருந்து சென்றதும், அவர் கடல் பகுதியில் வீசிய சிவ லிங்கத்தை தேடி எடுத்தார். பின்னர், அதை வீட்டுக்கு கொண்டு சென்றார்.

இவை அனைத்தையும் அங்கிருந்த மீனவர்கள் சிலர், பார்த்து கொண்டு இருந்தனர். இதையடுத்து மோகன், சிவலிங்கத்தை கொண்டு சென்றதை, அசோக்கிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அசோக், மோகனிடம் சென்று, சிவலிங்கத்தை வீட்டில் வைக்க கூடாது. அப்படி வைத்தால், கேடு ஏற்படும். எடுத்த இடத்திலேயே வீசிவிசி என கூறினார். ஆனால் மோகன், நீ வீசிவிட்டு பேய்விட்டாய். இனி உனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. உன் வேலையை பார் என்றார்.

இதுகுறித்து அசோக், எண்ணூர் போலீசில் புகார் செய்தார். அதில், கடலில் கிடைத்த மரகதலிங்கம், மோகன் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக கூறினார்.

இதைதொடர்ந்து போலீசார், மோகன் வீட்டில் இருந்த சிவலிங்கத்தை பறிமுதல் செய்து, வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து பொன்னேரி கருவூலம் அனுப்பப்பட்டது. இதையொட்டி தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு பின், உண்மையான மரகதலிங்கமா அல்லது வெறும் கல்லா என்பது தெரியவரும். ஒருவேளை மரகத லிங்கமாக இருந்தால், பல லட்சம் மதிப்பாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.