man trying to immolation near cm Residency
முதலமைச்சர் எடப்பாடியின் கண் எதிரிலேயே, கடன் தொல்லையால் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடு அமைந்துள்ளது. இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு பணிகளுக்காக வெளியே புறப்பட்டார். முன்னதாக அங்கு அமைச்சர்களும், ஏராளமான தொண்டர்களும் திரண்டு இருந்தனர்.
அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி, தனது காரில் வெளியே புறப்பட்டார். அங்கிருந்த சிலர், தங்களது கோரிக்கை மனுக்களை முதல்வரிடம் கொடுத்தனர். அதை அவர் வாங்கி பரிசீலனை செய்வதாக உறுதியளித்து கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கிருந்த ஒருவர், தன்னிடம் இருந்த கோரிக்கை மனுவை கொடுத்து, தனது பிரச்சனைகளை கூறினார். அதற்கு, முதல்வர் எடப்பாடி, பரிசீலனை செய்வதாக கூறினார்.
திடீரென மனு கொடுத்த ஆசாமி மறைத்து வைத்திருந்த கேனில் இருந்து மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் ராஜு என தெரியவந்தது. மேலும் விசாரணையில், கடன் தொல்லை தாங்க முடியாமல் தவித்து வருகிறார்.
இதனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். ஆனால் முதல்வர், வழக்கம்போல் மனுக்களை வாங்கி பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். இதனால், விரக்தியடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
