பேஸ்புக்கில் முகம்தெரியாமல் பழகிய தோழியை நேரில் பார்த்தவுடன் கீழே கிடந்த பாட்டிலை உடைத்து உடைத்து குத்திய அந்த நண்பரை கோவை போலீசார் கைது செய்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, காந்திபார்க் அருகே இருக்கும், உப்பாரா தெரு, மாடசாமி என்பவரின் மகள் கனகலட்சுமி(வயது21). கோவை பாரதியார் பல்கலையில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த ஓர் ஆண்டுக்கு முன், ராமநாதபுரம், முதுகுளத்தூரைச் சேர்ந்த, ஏ.வேம்புராஜ்(வயது28) என்பவரிடம் இருந்து பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்வொஸ்ட் வந்தது.
அதை கனகலட்சுமி ஏற்றுக் கொண்டுள்ளார். தான் பி.இ. சிவில் எஞ்சினீரிங் படித்துள்ளேன், கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள எல்.அன்ட். டி. நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக வேம்புராஜ் தெரிவித்து கனகலட்சுமியுடன் சாட்டிங்கில் பேசி வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் பேசி வந்துள்ளனர்.
இவர்களின் சாட்டிங் பல மாதங்களாக தொடர்ந்தது. ஒரு நாள் கனகலட்சுமியிடம் தான் உன்னை காதலிப்பதாக வேம்புராஜ் கூறியுள்ளார். ஆனால், இதற்கு கனகலட்சுமி ஒத்துக்கொள்ளவில்லை.
தன்னுடைய படிப்பு பாதிக்கப்படும் என்பதால், காதலிக்க மறுத்து, வேம்புராஜ்ஜூடனான தொடர்பை கனகலட்சுமி துண்டித்தார்.
பின்னர், கனகலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டு, வேம்புராஜ் மீண்டும் தனது தொடர்பை புதுப்பித்துள்ளார். ஆனாலும் அவ்வப்போதும் தனது காதலை சொல்ல தவறவில்லை. இதற்கு கனகலட்சுமி மறுத்து அவரை முற்றிலும் நிராகரித்து, பேசுவதையும் துண்டித்துள்ளார்.
இதையடுத்து , இதுநாள்வரை தனது பேஸ்புக் தோழியை பார்க்காத வேம்புராஜ் பலகலைக்கழகத்தில் வந்து சந்திக்க விரும்புவதாக கனகலட்சுமியிடம் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த கனகலட்சுமி, பல்கலைக்கு அருகே இருக்கும் பஸ் நிறுத்தத்தில் புதன்கிழமை சந்திக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அப்போது முதல் முறையாக தனது பேஸ்புக் தோழி கனகலட்சுமியை சந்தித்தார் வேம்புராஜ் . அப்போதும் தனது காதலை கனகலட்சுமியிடம் தெரிவித்து, தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டுள்ளார். அதற்கு கனகலட்சுமி மறுக்கவே வேம்புராஜ்க்கு ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உடனே, அருகில் கிடந்த ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து உடைத்து கனகலட்சுமியின் கழுத்தில் குத்தி அவரை கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் கனகலட்சமி ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பிற மாணவர்கள் வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வருவதற்குள் வேம்புராஜ் தப்பி ஓடிவிட்டார்.
பாட்டில் குத்தில் படுகாயமடைந்த கனகலட்சுமியை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வேம்புராஜ் மீது குற்றவியல் பிரிவு 284, 234, 506 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில், புதன்கிழமை மாலை உக்கிடம் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வேம்புராஜை போலீசார் கைது செய்தனர். அவரை நீதிபதியிடம் நேரில் ஆஜர்படுத்தியதில், அவரை நீதிமன்ற காவலில் கோவை மத்தியசிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
