கோயம்பேடு அருகே ரத்தகாயங்களுடன் அடையாளம் தெரியாத ஆணின் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சில்லறை ரூபாய்களுக்காக அடித்துகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு ரயில் நகர் ஆற்றங்கரையோரம் அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கோயம்பேடு போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்த ஆணுக்கு 35 வயது இருக்கும் . உடலில் தலையிலும், கழுத்திலும் காயங்கள் மற்றும் ரத்தக்கறையுடன் உடல் உட்கார்ந்த நிலையில் கிடந்துள்ளது. கால் சட்டை மட்டும் அணிந்த நிலையில், குப்பை காகிதங்கள் அடங்கிய சாக்குப்பையுடன் உடல் கிடந்தது. ரத்தக்காயங்களுடன் கிடந்ததால் கொலையா என்ற சந்தேகத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
காகிதம் மற்றும் குப்பை பொறுக்குபவராக இருக்கலாம் ஆகவே அவரிடம் அதிக அளவில் சில்லறை நோட்டுகள் இருந்தது மர்ம ஆசாமிகளுக்கு தெரிய வந்திருக்கலாம் ஆகவே அந்த பணத்தை பறிக்கும் முயற்சியில் போராடியதில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
