Man arrested for who detained prime minister picture in facebook
திருப்பூர்
திருப்பூரில் மோடியை கேவலமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியிட்டவரை காவலாளர்கள் கைது செய்தனர். பாஜக மாவட்ட தலைவர் கொடுத்த புகாருக்கு தனிப்படை அமைத்து உடனடி நடவடிக்கை போலீஸ்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சின்னசாமி கடந்த 2-ஆம் தேதி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், பிரபாகரன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி படத்தை கேவலமாக மார்பிங் செய்து சித்தரித்து படம் வெளியிட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் நாகராஜன் உத்தரவின்படி, துணை ஆணையர் கயல்விழி கண்காணிப்பில் வடக்கு உதவி ஆணையர் அண்ணாத்துரை மேற்பார்வையில், வடக்கு காவல் ஆய்வாளர் பிச்சையா தலைமையில் உதவி ஆய்வாளர் விஜயமோகன், காவலாளர்கள் கல்யாணபாண்டி, அம்சத்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பாக திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவலாளர்களும் விசாரித்தனர். பிரதமர் மோடியை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் குறித்தும், அவருடைய முகநூல் அடையாளத்தை வைத்தும், சம்பந்தப்பட்டவரின் முகநூல் நண்பர்கள் குறித்தும் விசாரணை செய்யப்பட்டது.
இதில் முகநூலில் பதிவிட்ட பிரபாகரன் (23), திருப்பூர் எஸ்.வி.காலனியில் 4-வது வீதியில் தங்கியிருந்து வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தது தெரியவந்தது.
பிரபாகரனின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த வளையமாதேவி ஆகும். இதனைத் தொடர்ந்து பிரபாகரனை தனிப்படை காவலாளர்கள் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
