Man arrested for poaching in the forest and stayed two days

அந்தியூர் வனப்பகுதியில் இரண்டு நாள் தங்கியிருந்து, துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உள்பட்ட தென்பர்கூர் முதல் ஓடை தடாகம் பகுதி இருக்கிறது. வனச்சரகர் முருகேசன், வனவர் தனபால் மற்றும் வன ஊழியர்கள் இந்த பகுதியில் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயத்தில், இரண்டு பேர் சாக்கு மூட்டைகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி போன்றவற்றுடன் சென்றுக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட வனத்துறையினர், அவர்களை அருகே அழைத்தனர். ஆனால், அவர்கள், இருவரும் மூட்டைகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.

மறுபக்கத்தில் வந்த மற்றொரு வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில், ‘அவர்கள் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கத்திரிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் தம்பி (55), பழனியப்பன் (65). இவர்கள் இருவரும் சென்னம்பட்டி வனப்பகுதியில் இரண்டு நாள்கள் தங்கி இருந்து ஒரு புள்ளிமான் குட்டி, ஒரு கட மான் ஆகியவற்றை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிக் கொன்றுள்ளனர்.

இதில் கட மானை வெட்டி அதன் இறைச்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி காய வைத்து ஒரு சாக்கு மூட்டையில் கட்டி உள்ளனர். மேலும், கொல்லப்பட்ட புள்ளிமான் குட்டியை அப்படியே மற்றொரு சாக்கு மூட்டையில் கட்டி உள்ளனர்.

பின்னர் இரண்டு மூட்டைகளையும் ஆளுக்கொரு மூட்டையாக அவர்கள் இருவரும் தூக்கிக் கொண்டுச் சென்றபோது தான் வனத்துறையினரிடம் சிக்கியுள்ளனர் என்பது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து தம்பி, பழனியப்பன் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ இறைச்சி, புள்ளிமான் குட்டி உடல், மான் கால்கள் – 4, ஒரு நாட்டுத்துப்பாக்கி, 1½ கிலோ வெடி மருந்து, இரண்டு அரிவாள், ஒரு கத்தி, ஒரு டார்ச்லைட், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.