திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வீட்டில் தனியாக இருந்த மாமியார், மருமகளை குடிவெறியில் கொலை செய்த வாலிபரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பக்கிரிபாளையத்தைச் சேர்ந்தவர் அஸ்மத்பீ (80). இவரது மகன் யூனிஷ்கான் (55). பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். யூனிஷ்கான் மனைவி தில்ஷாத் (45). தில்ஷாத் தனது மாமியார் அஸ்மத்பீயுடன் பக்கிரிபாளையத்தில் வசித்து வந்தார்.

கடந்த 16-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமியாரும், மருமகளும் மறுநாள் காலையில் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்து செங்கம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து, வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா உத்தரவின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்திவந்த நிலையில் நேற்று பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ரவி (25) என்பவர் அஸ்மத்பீயையும், தில்ஷாத்தையும் கொலை செய்ததாக பக்கிரிபாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார்.

பின்னர் அவர், செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து காவலாளர்கள் ரவியை கைது செய்து அவரிடம் விசாராணை நடத்தினர்.

அந்த விசாரணையில், “கடந்த 16-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் ரவி அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்துவிட்டு போதையில் தில்ஷாத்தை கற்பழிக்க வேண்டும் என்று அவரது வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓட்டைப் பிரித்து வீட்டிற்குள் இறங்கியுள்ளார்.

சத்தம் கேட்டு வந்த தில்ஷாத்தின் மாமியார் அஸ்மத்பீயை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் ரவி.

பின்னர் தில்ஷாத்தை கற்பழிக்க முயற்சி செய்தபோது சத்தம் போட்டதால் தில்ஷாத்தின் கழுத்தை கையால் இறுக்கியுள்ளார் ரவி. இதனால் தில்ஷாத் மூச்சு, பேச்சு இல்லாமல் மயங்கியுள்ளார். பின்னர் அவர், மயங்கிய நிலையில் இருந்த தில்ஷாத்தை கற்பழித்துள்ளார். இதனையடுத்து தில்ஷாத் பரிதாபமாக இறந்துள்ளார்” என்று காவலாளர்கள் கூறினார்.

கைது செய்யப்பட்ட ரவியை காவலாளர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.