திருப்பூர்

சென்னை - திருவனந்தபுரம் இரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த திருப்பூரை சேர்ந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். மனைவி சகோதரியின் கணவரை பழிவாங்க செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார்.

சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாள்தோறும் மாலை 3.25 மணிக்கு விரைவு இரயில் புறப்படும். அந்த வகையில் இந்த இரயில் நேற்று முன்தினம் வழக்கம்போல சென்னையில் இருந்து புறப்பட்டது. 

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அந்த இரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி இரயில் நிலையத்திற்கு இரயில் வரும்போது குண்டு வெடிக்கும் என்றும் சென்னையில் உள்ள இரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்துப் பேசினார். பின்னர் அவர் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனையடுத்து அந்த குறிப்பிட்ட இரயிலில் தீவிர சோதனை நடத்த காவலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இரயிலின் ஓட்டுனரை தொடர்பு கொண்டு இரயிலை காட்பாடியில் நிறுத்தும்படி கூறினார்கள். 

இதன்படி காட்பாடியில் இரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் மத்தியில் பீதி ஏற்படாமல் இருக்க சிறிய அளவிலான சோதனை நடத்தப்பட்டது. பின்னர், வாணியம்பாடி இரயில் நிலையத்திற்கு இரயில் வந்ததும் இரயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஏறி காவலாளர்கள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனால், மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, வெறும் புரளி என்பது தெரியவந்தது. 

பின்னர் 20 நிமிட சோதனைக்கு பிறகு மாலை 6.35 மணிக்கு அந்த இரயில் புறப்பட்டு சென்றது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்த தீவிர விசாரணையில் காவலாளர்கள் இறங்கினர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் இருவர் செல்போன் எண்களையும் தெரிவித்திருந்தார். இந்த செல்போன் எண்களை வைத்து தீவிர விசாரணையில் இறங்கினார்கள். இந்த எண் தற்போது எங்கு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது? யாருடையது? மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து விசாரித்தனர். 

இதுகுறித்த தகவல்களையும் சேகரித்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பேசிய செல்போன் எண் திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி திருப்பூர் இரயில்வே காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட அந்த நபரை பிடிக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் நாகராஜன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தனிப்படை காவலாளர்கள் 15 வேலம்பாளையம் பகுதிக்கு சென்று அந்த முகவரியில் உள்ள நபர் குறித்து விசாரணை செய்தனர். 

அப்போது அங்கு இருந்த சுந்தரபாண்டியன் (26) என்ற பனியன் நிறுவன தொழிலாளி தான் இரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்த காவலாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில், சுந்தரபாண்டியன் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வ.ஊ.சி.நகரை சேர்ந்தவர் என்பதும், இவர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள முத்தான் தோட்டம் முத்துகோபால் நகரில் வசித்து வந்தது தெரியவந்தது. 

இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்தபோது வேலூர் மாவட்டம், காட்பாடி அருகில் உள்ள ஒடுகத்தூரை சேர்ந்த வள்ளி என்பவரை கடந்த 2014-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

சுந்தரபாண்டியன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் வெறுப்படைந்த வள்ளி கோபித்துக்கொண்டு சொந்த ஊர் சென்றுவிட்டார். ஊரில் வள்ளி தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், அங்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி வள்ளியை சுந்தரபாண்டியன் அழைத்தார். ஆனால், அவர் வர மறுத்துள்ளார். இதற்கு வள்ளியின் சகோதரி கணவரான சத்யாதான் காரணம் என்று சுந்தரபாண்டியன் நினைத்தார். எனவே, அவரை பழிவாங்க திட்டமிட்டார். 

இதனால் இரயிலுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததுடன் அப்போது சத்யாவின் செல்போன் எண்ணையும் மாற்றி கொடுத்ததும் தெரியவந்தது. 

இது தொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிந்து சுந்தரபாண்டியனை கைது செய்தனர்.