Asianet News TamilAsianet News Tamil

பெரிய விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் - பிரதமர் மோடி!

பெரிய விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

Major and big sports events should be held in India says pm modi smp
Author
First Published Jan 19, 2024, 8:20 PM IST | Last Updated Jan 19, 2024, 8:21 PM IST

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி (இன்று) முதல் வருகிற 31ஆம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற தொடக்க விழாவில், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகளுக்கான ஜோதியை பிரதமர் மோடியிடம் சரத் கமல், சுபா ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து, கேலோ இந்தியா சுடரை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். 'த' வடிவில் கேலோ இந்தியா சுடர் உள்ளது. இதையடுத்து, சிறப்பு உரையாற்றிய பிரதமர் மோடி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடங்குவதாக அறிவித்தார், அதன்படி, போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழியின் கலாச்சாரம் உங்களுக்கு உங்களின் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும் என்றார். 2024ம் ஆண்டு விளையாட்டு துறைக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளோம். பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும். உலக விளையாட்டு கட்டமைப்பில் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே அடுத்த இலக்கு.” என்றார்.

தமிழ்நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர். விளையாட்டுகளில் பல சாம்பியன்களை உருவாக்கிய தமிழகம், சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக திகழ்வதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள டிடி தமிழ் சேனலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “நாம் அனைவரும் இந்தியாவை உலகின் தலைசிறந்த விளையாட்டு நாடாக பார்க்க விரும்புகிறோம். இதற்காக, பெரிய விளையாட்டு நிகழ்வுகளை இந்தியாவில் ஏற்பாடு செய்வது முக்கியம். தேசத்தை  புதிய உயரத்துக்கு விளையாட்டு கொண்டு செல்கிறது.  விளையாட்டு பொருளாதாராத்தில் இந்தியாவின் பங்கை அதிகரிக்க வேண்டும். விளையாட்டு பொருட்கள் தயாரிப்பில் இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும் என்பதே இலக்கு. 2036இல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்றார்.

2018ஆம் ஆண்டு முதல் இன்று வரை, 12 கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று, கேலோ இந்தியா முன்முயற்சியால் 300க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், கேலோ இந்தியா விளையாட்டு தொடருக்கான சின்னத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios