Magalir Urimai Thogai Scheme : மகளிர் உதவி தொகை திட்டம்.! காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்
ஒரு கோடி மகளிர்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கிவைத்துள்ளார். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் முக்கிய தேர்தல் வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாகும், திமுக அறிவித்தபடி இந்த திட்டத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஒரு கோடி மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய்
இந்த திட்டத்தை செயல்படுத்திட முதல் கட்டமாக ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில், தமிழ்நாடு முழுவதும் 1 கோடி மகளிர் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கான தன்னம்பிக்கை திட்டம்
இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஆயிரம் ரூபாய் உதவி திட்டத்தால் மருத்துவ செலவு, தங்களது குழந்தைகளின் படிப்பு செலவு மேலும் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும் என மகளிர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். முன்னதாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 115-ஆவது பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
அண்ணா சிலைக்கு மரியாதை
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளஅறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்டவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.