தமிழக அரசியலில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் மாற்றத்தின் விளைவாக சசிகலா அணியில் இருந்து ஒவ்வொருவராக இடம் பெயர்ந்து வருகின்றனர். அதில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாபா பாண்டியராஜனும், தற்போது இணைய உள்ளதாக தகவல்கள் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த டிசம்பர் 5 மற்றும் பிப்ரவரி 5ம் தேதிக்கு பிறகு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதிமுக அணிக்குள்ளேயே ஒ.பி.எஸ். – சசிகலா என இரண்டாக பிரிந்து நிற்கிறது.

ஆரம்பத்தில் சாராணமாகவும் கண்டு கொள்ளப்படாமலும் இருந்த ஒ.பன்னீர்செல்வம், நம்பிக்கையுடன் தெரிவித்து இருந்ததுபோல், அடுத்தடுத்து அவரை நோக்கி எம்எல்ஏக்கள் வர தொடங்கினர். ஒரு கட்டத்தில் அவை தலைவர் மதுசூதனனே ஒ.பி.எஸ். அணியில் இணைந்துவிட்டார்.

இதனிடையே, ஆளுனரை சந்தித்து சசிகலா, தனது ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியலை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஓ.பி.எஸ். தரப்பிலும், ஆளுனரை சந்தித்து தனது ஆதரவு எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு ஆட்சி அமைக்க சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆளுனர் சசிகலாவை அழைப்பதை நிறுத்தி வைத்தார். இதனிடையே சசிகலாவை, முதலமைச்சராக்க ஆளுனர் அழைக்காததும், வழக்கு தீர்ப்பு விரைவில் வர உள்ளதும், பொது செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வானது குறித்த சர்ச்சையும், கட்சிக்குள் அவரது நிலைபாட்டை அசைத்துள்ளது.

இதனால் சசிகலா தரப்பில் இருந்து விலகும் முடிவுக்கு பலர் வந்துள்ளனர். தேமுதிகவில் இருந்து அதிமுகவுக்கு சென்று, அமைச்சரான மாபா பாண்டியராஜன், ஆரம்பத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தாலும், இன்று திடீரென அவரது நிலைபாட்டை மாற்றி கொள்வதாக, சூசகமாக தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களின் குரலுக்கு மதிப்பளித்து நடப்பேன் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, மாபா பாண்டியராஜனுக்கு, சமூக ஊடகஙகளில் மக்களின் கருத்தை மதித்து நடக்க வேண்டும். வாக்களித்தவர்களின் எண்ணத்துக்கு மாறாக நடக்க வேண்டாம் என்று ஆயிரக்கணக்கான கோரிக்கைகள் வந்தன. இதற்கு பதில் அளித்த பாண்டியராஜன், உங்களது அனைவரின் எண்ணங்களையும் நான் மதிக்கிறேன். கண்டிப்பாக கவனத்தில் கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

ஆகவே, மாபா பாண்டியராஜன், தற்போது தனது நிலைபாட்டை மாற்றி, முதல்வர் ஒ.பி.எஸ்.சை சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்கலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.