இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் நேரடியாக கண்டு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் கொடியேற்றத்துடன் துவங்கி 15 நாட்களுக்கு மேல் நடைபெறும். இந்த திருவிழாவிற்கு தென்மாவட்டங்களை சேர்ந்த அனைத்து மக்களும் மதுரையை நோக்கி படையெடுப்பர். மதுரை மாநகரம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், திருத்தேர், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிக பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்வுகளில் மாவட்ட முழுவதிலிருந்து ஏராளமானோர் வருகை புரிவர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அரசு தடைவிதித்திருந்தது.

இதனால் சித்திரை திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளிலும் மக்கள் நேரடியாக கலந்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், திருத்தேர், கள்ளழகர் எதிர் சேவை உள்ளிட்ட நிகழ்வுகள் இணையத்தில் மக்கள் காணும்படி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால், அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் நேரடியாக கண்டு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தை காண ஏப்.4 முதல் 7-ம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண உற்சவ விழாவில் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் வசதிக்காக ரூ.200, ரூ.500 க்கு கட்டணச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்து www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.