12ஆம் வகுப்பு தேர்வில் 100% வெற்றி பெற்ற சிறைக்கைதிகள்..! எவ்வளவு மார்க் எடுத்திருக்காங்க தெரியுமா.?
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் மாணவிகள் 94.56 சதவிகிதம் வெற்றி பெற்ற நிலையில், மதுரை மத்திய சிறையில் தேர்வு எழுதிய கைதிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 7 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்களில், 94.56 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், அரசு பள்ளிகள் 91.02 சதவிகித தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49 சதவிகித தேர்ச்சியும், தனியார் பள்ளிகள்- 98.70 சதவிகித தேர்ச்சியும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதே போல மொத்தம் உள்ள 7532 மேல்நிலைப் பள்ளிகளில், 2478 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றுள்ளன. 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றிருப்பதாக தேர்வுத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்வில் சாதித்த சிறைக்கைதிகள்
அதே நேரத்தில் மதுரை மத்திய சிறையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் 15 தண்டனை சிறைவாசிகள் 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். இதில் 15 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் சிறைவாசி ஆரோக்கிய ஜெய பிரபாகரன் என்பவர் 536 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார். சிறைவாசி அலெக்ஸ் பாண்டியன் என்பவர் 532 எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண் குமார் என்பவர் 506 எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களை சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டினர்.