Asianet News TamilAsianet News Tamil

கல்லூரி மாணவன் உயிரிழந்த வழக்கு..சிபிஐ விசாரிக்க கோரி மனு. உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு..

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது தாய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.  
 

Madurai high court
Author
Tamilnádu, First Published Jan 22, 2022, 2:58 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோழினேந்தலைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வீடு திரும்பிய அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதே மகனின் மரணத்துக்கு காரணம் என குற்றம்சாட்டிய தாய் ராமலட்சுமி, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

அதில், "எனது கணவர் மாற்றுத்திறனாளி.  நான்கு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் மணிகண்டன் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரியில் இளநிலை படிப்பு பயின்று வந்தார். கடந்த 4ஆம் தேதி மணிகண்டன் அவரது நண்பர்களோடு சேர்ந்து உரங்களை வாங்குவதற்காக சென்ற நிலையில், கீழத்தூவல் காளி கோவில் அருகே காவலர்கள் லட்சுமணன் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.

Madurai high court


 
மணிகண்டன் வாகனத்தை நிறுத்தாமல் செல்லவே, அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு வந்து மகனை அழைத்துச் செல்லுமாறு காவல் நிலையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. காவல் நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளர்கள் லட்சுமி மற்றும் கற்பகம் ஆகியோர் மணிகண்டனை விரைவாக அழைத்துச் செல்லுமாறு அவசரப்படுத்தினார். அதோடு எனது மகனை புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

மகனை வீட்டிற்கு அழைத்து சென்ற போது உடல் முழுவதும் வலியாக இருப்பதாகவும், காவல்துறையினர் பிறப்புறுப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்தார். மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக மகனிடம் தெரிவித்திருந்த நிலையில், அதிகாலை 1.30 மணி அளவில்  உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்விற்காக  முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Madurai high court


 
எனது மகனின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. காவல்துறையினர் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதே மகனின் இறப்பிற்கு காரணம். மகனின் உடலை மறுஉடற்கூறு ஆய்வு செய்யும் பட்சத்திலேயே இறப்பிற்கான காரணம் தெரியவரும். ஆகவே மகனின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்யவும், முதுநிலை காவல்துறையினர் மூலம் இந்த வழக்கை விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது.கடந்த மாதமே மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 2 உடற்கூராய்வு அறிக்கையிலும், மணிகண்டன் விஷம் அருந்தி உயரிழந்தார் எனவும் உடலில் உள் காயங்கள் ஏதும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios