Asianet News TamilAsianet News Tamil

யூடியூபும் குற்றவாளி தான்..ஒட்டுமொத்தமாக தடை விதிக்கலாமா..? கேள்விகளால் துளைத்த நீதிமன்றம்..

தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூபும் குற்றவாளிதான் என்று கூறிய நீதிமன்றம் யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. 

Madurai high court
Author
Madurai, First Published Jan 20, 2022, 5:46 PM IST

சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும், அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டதாக அவர்மீது வழக்குபதிந்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாட்டை துரைமுருகன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி  தமிழக முதல்வர் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக மீண்டும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, யூடியூபில் வெடிகுண்டு தயாரிப்பது, கள்ளசாராயம் தயாரிப்பது போன்றவையெல்லாம் கற்றுக்கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அவர்கள் எப்படி இதையெல்லாம் செய்கிறார்கள்? அவற்றைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினார். யூடியூபைப் பார்த்து துப்பாக்கி செய்தேன், யூடியூபைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன், யூடியூபைப் பார்த்து வங்கியில் கொள்ளையடித்தேன் என குற்றவாளிகள் பலர் வாக்குமூலம் கொடுக்கின்றனர். அது போன்ற வீடியோக்களை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அல்லது யூடியூபையும் குற்றவாளியாகக் கருத வேண்டும் என்று கூறினார். 

மேலும் யூடியூபில் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாமா? என்றும் வெளி மாநிலங்களிலிருந்து இது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனில் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் யூடியூபிற்கு மொத்தமாக தடை விதிக்கலாம். அவற்றில் சில நல்ல விசயங்கள் உள்ளன. இருப்பினும் இது போன்ற  தேவையற்ற பதிவுகள் செய்யப்பட்டால் தடை செய்யலாமே? என்று நீதிபதி கேள்வியெழுப்பினார்.

வழக்கறிஞர்கள்  தரப்பில், யூடியூபில் சாதிய ரீதியாக, மத ரீதியாக, விளையாட்டு குழுக்கள் ரீதியாக என பல பிரிவுகள் உள்ளன. கமெண்டுகளில் மோசமான, தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூபும் குற்றவாளிதான். ஆகவே யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? என்பது குறித்து தமிழக அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios