Madurai High Court Acting Canceled by Government of Tamil Nadu

மதுரை

எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்தும், அந்தப் பதவியில் மருத்துவர் ரேவதி கயிலைராஜனை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ரேவதி கயிலைராஜன், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “கடந்த 1987–ஆம் ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றத் தொடங்கினேன். பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் பணிபுரிந்து உள்ளேன்.

கடந்த 2013–ஆம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரி டீனாக பதவி உயர்வு பெற்றேன். தற்போது கரூர் மருத்துவ கல்லூரி டீனாக உள்ளேன். பணி மூப்பு அடிப்படையில் மருத்துவ கல்வி இயக்குனர் ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் எனக்குள்ளன.

ஆனால், தகுதி அடிப்படையில் அந்த பதவியை எனக்கு வழங்கவில்லை. மாறாக கோவை மருத்துவ கல்லூரி டீனாக இருந்த மருத்துவர் எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக அறிவித்து கடந்த ஏப்ரல் 25–ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அவருக்கு பதவி வழங்கியது சட்டவிரோதம். எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். எனக்கு மருத்துவக் கல்வி இயக்குனர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, ‘‘தகுதி அடிப்படையில் தான் எட்வின் ஜோ மருத்துவக் கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேலும், எட்வின் ஜோ கடந்த 2009–10–ஆம் கல்வி ஆண்டிலேயே மருத்துவக் கல்லூரி டீனாக பதவி உயர்வு பெற்றுவிட்டார். ஆனால், ரேவதி கயிலைராஜன், கடந்த 2013–ஆம் ஆண்டு தான் டீனாக பதவி உயர்வுப் பெற்றார்.

எனவே, மருத்துவ சேவைகள் விதிப்படி பணி மூப்பு அடிப்படையில் மருத்துவ கல்வி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மருத்துவத் துறையில் பணி மூப்பு பட்டியல் அடிப்படையில் 4018–வது இடத்தில் ரேவதியும், 4821–வது இடத்தில் எட்வின் ஜோவும் உள்ளனர். ஆனால், விதிகளை பின்பற்றாமல் எட்வின் ஜோ அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பணி மூப்பு அடிப்படையில் மருத்துவக் கல்வி இயக்குனராக எட்வின் ஜோ நியமிக்கப்பட்டதற்கான போதிய ஆவணங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை.

மேலும், மனுதாரர் 2018–ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஓய்வு பெற இருப்பதால் அவருக்கு பதவி உயர்வு வழங்கியிருக்க வேண்டும். எனவே, கடந்த ஏப்ரல் 25–ஆம் தேதி மருத்துவக் கல்வி இயக்குனராக எட்வின் ஜோவை நியமனம் செய்து பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

மருத்துவர் ரேவதி கயிலைராஜனை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனராக நியமனம் செய்ய வேண்டும்” என்று நீதிபதி அதிரடி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.