madurai HC notice to TN government
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சி.பி.எஸ்.இ படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இடமும், தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடும் வழங்கிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, அட்வகேட் ஜெனரலுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது
மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய அளவில் வரும் 16-ந்தேதி கலந்தாய்வு நடக்கிறது. தமிழ்நாட்டில் 17-ந்தேதி கலந்தாய்வு தொடங்குகிறது,
தமிழக அரசின் இந்த உள் ஒதுக்கீடு உத்தரவின் அடிப்படையில் தமிழக கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பெரும்பான்மை இடம் கிடைக்கும்.
சட்ட பாதுகாப்பு இருக்கும் வகையில் மிகுந்த கவனத்தோடு இந்த அரசாணையை அரசு பிறப்பித்து இருக்கிறது என்றும், நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும், என்றாலும் தமிழக அரசின் கல்வி திட்டத்தின் கீழ் படித்த 85 சதவீத மாணவர்கள் இதனால் பயன்பெறுவார்கள் என தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த 85 % இட ஒதுக்கீடு அறிவிப்பால் சி.பி.எஸ்.இ, திட்டத்தில் படித்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் நீட் தேர்வு என்பது அனைவருக்கும் பொதுவாக வைக்கப்பட்ட தேர்வு என்றும், இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என பிரித்துப் பார்க்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 % உள் ஒதுக்கீடு என்பதை ஏற்க முடியாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிபதிகள் 85 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
