மதுரை சித்திரைத் திருவிழாவின் 11ஆம் நாளான இன்று, பிரம்மாண்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மீனாட்சி அம்மன் வேடமணிந்து வந்த பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
Madurai Chithirai Festival : மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதன் 11ஆம் நாளான புதன்கிழமை, பிரம்மாண்டமான தேரோட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதுபற்றி பேசிய கிருபா என்ற பக்தர், "மதுரையில் சித்திரைத் திருவிழா ரொம்ப பிரம்மாண்டமா நடக்குது. இன்னைக்கு 11-வது நாள் தேரோட்டம். வெளியூர்ல இருந்து ஏகப்பட்ட பேர் வந்திருக்காங்க. சொல்லப்போனா, மதுரை நகரமே இங்க திரண்டு வந்த மாதிரி இருக்கு. நான் சின்ன வயசுல இருந்தே இந்த திருவிழாவுக்கு வந்துட்டு இருக்கேன். போன வருஷத்தை விட இந்த வருஷம் நிறைய பேர் மீனாட்சி அம்மன் வேஷம் போட்டு வந்திருக்காங்க. இதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார்.
உத்யா ஸ்ரீ என்ற இன்னொரு பக்தர், "நேத்து ராத்திரி மீனாட்சி அம்மனைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன், ஆனா முடியல. அதனால இன்னைக்கு தேரோட்டத்துல அம்மனைப் பார்க்க வந்தேன். அம்மன் ரொம்ப அழகா இருக்காங்க. நானும் அம்மன் மாதிரி வேஷம் போடணும்னு ஆசைப்பட்டேன், அதனால மீனாட்சி அம்மன் வேஷம் போட்டு வந்திருக்கேன். இந்த உடையில இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு இந்த திருவிழாவுல கலந்துகிட்டது ரொம்ப மகிழ்ச்சி" என்று கூறினார்.

மதுரையில் களைகட்டிய தேரோட்டம்
முன்னதாக, கடந்த மார்ச் மாதம், தேவாரப் பாடல் பெற்ற 274 ஸ்தலங்களில் 67-வது ஸ்தலமான உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலிலும் பிரம்மாண்ட தேரோட்டம் நடைபெற்றது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் மீண்டும் வாழ்வளித்த தலமாக இது கருதப்படுகிறது. மேலும், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற சிறப்புமிக்க கோயில் இதுவாகும். இந்தக் கோயிலில் பிரம்மோற்சவ விழா மார்ச் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகளும், சுவாமி புறப்பாடும் நடைபெற்றன.
தேரோட்டத்தின்போது, அஞ்சனாட்சி மற்றும் பாலாம்பிகையுடன் உஜ்ஜீவநாதர் எழுந்தருளினார். அர்ச்சகர் ஆரத்தி காட்டிய பிறகு, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, பாரம்பரிய கயிலாய வாத்தியங்கள் முழங்க, பெண்கள் கோலாட்டம் ஆடினர்.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான மத மற்றும் கலாச்சார விழாக்களில் சித்திரைத் திருவிழாவும் ஒன்று. பக்தி, பாரம்பரியம் மற்றும் மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்த தனித்துவமான விழாவைக் காண ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடுகின்றனர்.


