மதுரையில் 2026 சித்திரை திருவிழா சிறப்பாக நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ல் நடைபெறுகிறது. அந்நாளில் சுமங்கலி பெண்கள் புதிய தாலிச்சரடு மாற்றிக்கொள்ள உகந்த நேரத்தையும், வீட்டில் இருந்தபடியே அம்மன் அருளைப் பெற வழிபடும் முறையையும் இங்கு எளிமையாக அறிந்து கொள்ளலாம்.
மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். வேறு எந்த கோவிலிலும் இல்லாத அளவிற்கு ஏராளமான தனித்துவமான சிறப்புக்களைக் கொண்டது இக்கோவில். இக்கோவிலில் நடைபெறும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று, சித்திரை மாதத்தில் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா. 12 நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று தான் அன்னை மீனாட்சி - சுந்தரேஸ்வர பெருமான் திருக்கல்யாணம் வைபவம்.
மீனாட்சி திருக்கல்யாணம் :
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக ஏப்ரல் 26ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. மதுரையின் அரசியாக முடி சூட்டப்பட்ட பிறகு அடுத்த 4 மாதங்களுக்கு மதுரையில் மீனாட்சி அம்மையின் ஆட்சி நடைபெறும். அதன் பிறகு சிவபெருமான், மதுரையின் அரசனாக ஆட்சி புரிவதாக ஐதீகம். சிவனும்- சக்தியும் மாறி மாறி மதுரையை ஆட்சி செய்யும் இது போன்ற அற்புதத்தை வேறு எங்கும் காண முடியாது. மீனாட்சி பட்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் ஏப்ரல் 27 அன்று மீனாட்சி திக் விஜயமும், ஏப்ரல் 28ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். மீனாட்சி அம்மனின் திருமணத்தை நடத்தி வைக்க அழகர்மலையில் இருந்து கள்ளழகர் வர தாமதமானதால், திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்ரமணிய சுவாமியும், பவளகனிவாய் பெருமாளும் மதுரைக்கு வந்து திருமணத்தை நடத்தி வைப்பதாக ஐதீகம்.
ஏன் சித்திரை மாதம் திருக்கல்யாணம்?

பொதுவாக தெய்வ திருமணங்கள் அனைத்தும் பங்குனி உத்திரத்தில் செய்வது வழக்கம். பங்குனி உத்திரம் அன்று தான் மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. ஆனால், மீனாட்சிக்கு மட்டும் சித்திரை மாதத்தில் தான் திருக்கல்யாணம் நடைபெறும். பாண்டிய மன்னர்களின் ஆட்சி முறைப்படி, சித்திரை மாதம் என்பது 'வசந்த காலத்தின்' தொடக்கம். அதனால் பக்தர்களின் வாழ்க்கையும் சிறக்க அன்னை மீனாட்சிக்கு சித்திரை மாதத்தில் திருக்கல்யாணம் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. திருமலை நாயக்கர் மன்னர் காலத்திற்கு முன்பு வரை மீனாட்சி திருக்கல்யாணம் உள்ளிட்ட மீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள், பங்குனி மாதத்திலும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது உள்ளிட்ட அழகர்மலை உற்சவங்கள் சித்திரை மாதத்திலும்ய நடைபெற்றதாகவும், திருமலை நாயக்க மன்னர் தான், சைவ-வைணவ ஒற்றுமையை ஏற்படுத்த இந்த விழாக்களை ஒன்றாக இணைத்து நடத்தியதாக சொல்லப்படுகிறது.
பச்சை பட்டு உடுத்தும் ரகசியம் :
திருக்கல்யாணத்தின் போது அன்னை மீனாட்சிக்கு அணிவிக்கப்படும் உடைகளில் 'பச்சை' நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இது வெறும் அழகிற்காக அல்ல. மதுரை ஒரு காலத்தில் கடம்ப வனமாக இருந்தது. இயற்கையோடு இணைந்த அந்த வனத்தின் அரசியாக அவள் இருப்பதைக் குறிக்கவே பச்சை நிறம். மேலும், அழகர் (விஷ்ணு) பச்சை நிறம் கொண்டவர் என்பதால், அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையிலான அந்த ரத்த உறவின் பிணைப்பை உறுதிப்படுத்தும் குறியீடாக இது பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் நம்பிக்கை:
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் போது, மதுரையில் உள்ள சுமங்கலிப் பெண்கள் அனைவரும் தங்கள் மாங்கல்யக் கயிற்றைப் புதிதாக மாற்றிக் கொள்வார்கள். அன்னைக்கு தாலி கட்டப்படும் அதே நேரத்தில், ஊரே தாலி மாற்றிக் கொள்ளும் இந்த நிகழ்வு 'மாங்கல்ய பலம்' தரும் என்பது ஐதீகம். திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதப் பைகளில் இப்போதும் கூட மஞ்சள், குங்குமம் மற்றும் ஒரு சிறிய கயிறு இருக்கும். இது அன்னை மீனாட்சி தன் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்குத் தரும் 'சீதனமாக' கருதப்படுகிறது. மீனாட்சி அன்னையை மதுரை மக்கள் தங்கள் வீட்டு பெண்ணாக நினைப்பதால், மதுரையில் இந்த நாளில் திரும்பிய பக்கம் எல்லாம் திருமணம் விருந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் வழக்கம் உள்ளது.
மீனாட்சி திருக்கல்யாணம் 2026 தாலிச்சரடு மாற்ற நல்ல நேரம் :

மீனாட்சி திருக்கல்யாணம் இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி செவ்வாய்கிழமை நடக்கிறது. காலை 08.35 மணி முதல் 08.59 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும் இந்த நேரத்தில் சுமங்கலி பெண்கள், தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் காலை 10.35 முதல் 11.30 வரையிலான நேரத்தில் தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம். மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் நாள் என்பதால் செவ்வாய்கிழமையில் தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாமா என்ற தயக்கம் இல்லாமல் பெண்கள் தாராளமாக தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம்.
வீட்டில் வழிபடும் முறை :
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் நேரில் சென்று கலந்து கொள்ள முடியாதவர்கள் வீட்டில் உள்ள மீனாட்சி அம்மன் படத்திற்கு பூக்கள் சூட்டி, விளக்கேற்றி வைத்து, சர்க்கரை பொங்கல் நிவேதமான படைத்து வழிபடலாம். அன்னை மீனாட்சியின் 108 போற்றி மந்திரங்களை சொல்லி, அர்ச்சனை செய்து வழிபடலாம். மஞ்சள் தயிறு, குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு போன்ற மங்கள பொருட்களை சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்கலாம். யாராவது இரண்டு பேருக்கு இந்த நாளில் அன்னதானம் படைக்கலாம். இதனால் மீனாட்சி அம்மனின் அருள் நமக்கு கிடைக்கும்.


