தெருக்கள் மற்றும் ஊர்ப்பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து, அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தெருக்கள், சாலைகள் மற்றும் ஊர்ப்பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், அரசாணையின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தடைக்கான பின்னணி குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
சாதி பெயர்களை நீக்க எதிர்ப்பு
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "சாதி பெயர்கள் இருப்பதால் இதுவரை எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதாக புகார் அளிக்கப்படவில்லை. மேலும், இந்த அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை," என்று குறிப்பிட்டிருந்தார். சட்டவிரோதமான இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
நீதிபதிகள் அளித்த உத்தரவு இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் அனிதா, சுமந்து குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் பெயர்களையும், ஆன்மிகத் தலைவர்களின் பெயர்களையும் நீக்கும் நோக்கத்துடன் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது," என வாதிட்டனர்.
இடைக்காலத் தடை
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்தனர்.
இருப்பினும், இந்த அரசாணையை செயல்படுத்துவது தொடர்பாக முதல்கட்ட கள ஆய்வுப் பணியை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என்றும், சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக கருத்துக் கேட்பு நடத்தலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், சாதி பெயர் நீக்கம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
